தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகள் உள்ளன.


2022-23ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப பதிவு https://adm.tanuvas.ac.in/ என்ற பல்கலைகழகத்தின் இணையத்தளம் மூலம் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கப்பட்டட்து. செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட விண்ணப்ப பதிவு செப்டம்பர் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திருத்தம் செய்யவும், சான்றிதழ் பதிவேற்றம் செய்யவும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மொத்தமாக பெறப்பட்ட 16214 விண்ணப்பங்களுள், 13470 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும் (BVSC & AH9), 2744 விண்ணப்பங்கள் மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) பாடப்பிரிவிற்கும் பெறப்பட்டது.  2022-23ஆம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலின் விவரங்களை  https://adm.tanuvas.ac.in/ மற்றும் https://tanuvas.ac.in/ இணையதளங்களின் வாயிலாக காணலாம்.


கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு (கலையியல் பிரிவு BVSc & AH ) கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த மாணவர் எஸ்.சந்திரசேகர், ஈரோடு மாவட்டத்தை சார்ந்த கே.டி.  முத்துப்பாண்டி மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த மாணவி எம். ஹரினிகா ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.


இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech) தரவரிசைப் பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த மாணவி எஸ். கே.சுபா கீதா  200.000 க்கு 199.500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த கே.அஸ்வின் (198.000 / 200.000) மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சார்ந்த எம்.ஷாஜீகா (198.000 / 200.000) ஆகிய மாணவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.


 சிறப்பு பிரிவில் (மாற்றுத்திறானிகள் மற்றும் விளையாட்டு பிரிவு) மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி கலந்தாய்வு, 29.10.2022 அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நடைபெறும். அதேபோல் சிறப்பு பிரிவான முன்னாள் இராணுவ வீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு (7.5% Quota), கலையியல் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு ஆகிய மாணவர்களுக்கான கலந்தாய்வு 29.10.2022 (சனிக்கிழமை), காலை 10.00 மணி முதல் இணையதள வாயிலாக நடத்தப்படும். கலந்தாய்வு அட்டவணை (Counselling Schedule) பல்கலைக்கழக இணையதளங்களில் (https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in) காணலாம்.