தஞ்சை மாவட்டம் களிமேடு அப்பர் மடத்தில் நடந்த சதய விழாவின் போது திருத்தேர் மீது மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அப்பர் குருபூஜை கொண்டாடப்படுவதன் பின்னணி என்னவென்பதை பார்க்கலாம்.


அப்பர் பெருமானுக்கு திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் விழா நடக்கிறது. அப்பர் பங்குனி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. அப்பெருமானார் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குருபூஜை நடைபெறுகிறது.


பல்வேறு தலங்களுக்கு சென்று பாடல்களைப் பாடியுள்ள அப்பர் பெருமானுக்கு அந்தந்தத் தலங்களில் விழா சிறப்பாக கொண்டாடுகிறது. ஆனால் இதற்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு பகுதிதான் தஞ்சை அருகே உள்ள களிமேடு என்ற கிராமம். இங்கு 93 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடந்து வருகிறது. 


தஞ்சை அருகே உள்ளது களிமேடு என்ற கிராமம். இங்கு 93 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடந்து வருகிறது. தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் களிமேடு. இங்குதான் மூன்று நாட்கள் அப்பர் சதய விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வடகரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இம்மடம் 90 ஆண்டுகளுக்கு முன்பு உயிர்க்கொலை பாவம் எனக் கருதிய ஊர்ப் பெரியவர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இம்மடத்தில் தஞ்சை பாணி ஓவியத்தில் அமைந்த அழகிய அப்பர் பெருமான் ஓவியம் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்று கூறப்படுகிறது. குருபூஜை நாளன்று மலர்களைக் கொண்டு அலங்கரித்து, அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேர் வீதி உலா வரும். அப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நடத்தி மக்கள் வழிபாடு நடத்துவர். சில ஆண்டுகளாக அப்பர் உருவச்சிலை வைக்கப்பட்டு ஊர்வலம் நடந்து வருகிறது. 


ஆண்டுதோறும் பெரியவர்களும், சிறியவர்களும் மார்கழி மாதத்தில் நாள்தோறும் அதிகாலை எழுந்து, குளித்து, திருநீறு அணிந்து தெருக்களின் வழியாக தேவாரப்பாடல்களை இசைத்தபடி சென்று அப்பர் மடத்தை அடைந்து வழிபாடு செய்வர். ஆண்டுதோறும் சித்திரை சதய விழா மூன்று நாட்கள் சிறப்பாக நடக்கும். அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 26ம் தேதி விழா தொடங்கியது. இதில் கடைசிநாளில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்த தேர்த்திருவிழாவில்தான் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது.