தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, “அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், சென்னை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, மதுரை, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை இடி மின்னலுடன் கூடிய நாளை மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் மழையின் அளவு குறைவாக உள்ள போதிலும் தற்போது தான் அது வீரியம் எடுத்துள்ளது என கூறப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இதனிடையே குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது லட்சத்தீவு, மாலத்தீவு ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் இன்று புதிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டில் நல்ல மழை பொழிவுக்கு காரணமாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையை பொருத்தவரை வானம் என்று பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கனமழைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல், தென் கிழக்கு கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நவம்பர் 23ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நவம்பர் 24ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.