தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் பிறந்தது முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்:


திருப்பூர், மதுரை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கடும் மழை பெய்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.






அதேபோல, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை. திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்குவதற்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கம் வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.


வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட அதிகளவிலே இந்த முறை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. இதன்காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.


மேலும், மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களின் நீர்மட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து அரசு அதிகாரிகளும், பணியாளர்களும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.