தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வெயில், மழை என மாறி, மாறி வானிலை கடந்த சில நாட்களாகவே நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்தது.



இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை:


சென்னையில் நேற்று மாலை வரை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், திடீரென நள்ளிரவில் மழை கொட்டித் தீர்த்தது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில். இந்த மழை பெய்துள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாநகர், வடபழனி, தேனாம்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.






இதன் காரணமாக, சென்னையின் முக்கிய சாலைகள் பலவற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், காலையில் பணிக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எங்கு அதிகம்?


சென்னையில் நேற்று இரவு பெய்த மழை அளவுப்படி, மணலியில் 14.49 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரவாயல் மற்றும் வானகரத்தில் தலா 8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  கோடம்பாக்கம், கொளத்தூர், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளிலும் 5 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.


சென்னையில் கடந்த சில மாதங்களாகவே மழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையிலே சென்னையில் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மழை நீர் தேங்கும் பகுதிகளில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், அதேசமயம் மழைநீரை முறையாக சேமிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.