2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஞாயிற்றுக் கிழமைகளோடு பிற பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, 2022ஆம் ஆண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டிருக்கும் பொது விடுமுறைகளின் பட்டியலில் மொத்தமாக 23 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 நாள்கள் அனைவருக்கும் பொருந்தும். 1 நாள் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு மட்டும் பொருந்தும் விடுமுறையாக வழங்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றாம் தேதி ஆங்கிலப் புத்தாண்டுக்கான விடுமுறையாக வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14 அன்றும், திருவள்ளுவர் தினத்தை அனுசரிக்கும் வகையில் ஜனவரி 15 அன்றும், உழவர் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஜனவரி 16 அன்றும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 18 அன்று தைப்பூசத்திற்காகப் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை ஒட்டி, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 அன்று வங்கிக் கணக்குகள் முடிவு செய்யப்படும் நாள் என்பதால் அன்று தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளுக்கும் விடுமுறை எனக் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 2 அன்று தெலுங்கு வருடப் பிறப்பு, ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள், தமிழ்ப் புத்தாண்டு ஆகிய விழாக்களும், ஏப்ரல் 15 அன்று புனித வெள்ளியும் அனுசரிக்கப்படுகின்றன.
மே 1 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 அன்று ரம்ஜான் பண்டிகையும், ஜூலை 10 அன்று பக்ரீத் பண்டிகையும், மொகரம் ஆகஸ்ட் 9 அன்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்திற்கான பொது விடுமுறை திங்கள்கிழமை வருகிறது. அதே வாரத்தில், ஆகஸ்ட் 19 அன்று, கிருஷ்ண ஜெயந்திக்கான பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 அன்று விநாயகர் சதுர்த்திக்கான பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி, அக்டோபர் 4,5 ஆகிய தேதிகளில் விஜய தசமி, ஆயுத பூஜை ஆகியவற்றை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்படுகிறது. அக்டோபர் 9 அன்று மிலாதுன் நபிக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 அன்று தீபாவளி கொண்டாடுவதற்காகவும், டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காகவும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.