தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
14 மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கரைபுரண்டோடும் காவிரி:
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அனைத்தும் நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்னர் வறண்டு காணப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
இதனிடையே கடந்த 28 ஆம் தேதி முதற்கட்டமாக டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு தற்போது அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் திறக்கப்பட உள்ளது. 16 கண் மதகுகள் வழியாக 1,08,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,71,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர், மதியம் 12 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 57 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இது மேலும் குறைந்து மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,30,000 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அணியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி-யாக உள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.