தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்வது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாடு பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே பெரிதும் நம்பியிருக்கிறது.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையே தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிக அளவு பெய்ததால், வடகிழக்கு பருவ மழையும் அதிக அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்கள்:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஊருக்கு படையெடுக்கும் பயணிகள்:
குறிப்பாக சென்னையை பொறுத்தவரை இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதாலும் காலை முதல் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மேலும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், காலை முதல் மக்கள் சொந்த ஊர்களுக்கும், விசேஷங்களுக்கும் சென்று வரும் சூழலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்த நிலையில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய சூழல் உள்ளது. சென்னையில் காலையிலே பல இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்தது.