முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 448 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 20,046 ஆக அதிகருத்துள்ளது.

ABP NADU Last Updated: 24 May 2021 06:49 AM
தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்- முழு விவரம்

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகுந்த தாக்கத்தை மாநிலம் முழுவதம் ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு, தற்போது எந்த தளர்வுகளுமின்றி நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்காக கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக 35 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு இன்றும் 35 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒருநாளில் 35 ஆயிரத்து 483 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 18 லட்சத்து 42 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் 5 ஆயிரத்து 169 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர்த்து பிற 36 மாவட்டங்களில் 30 ஆயிரத்து 314 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று தனிமைப்படுத்தப்படுவர்கள் உள்பட மொத்தாக சிகிச்சையில் இருப்பவர்கள் 49 ஆயிரத்து 55 ஆகும். தமிழ்நாடு முழுவதும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 10 லட்சத்து 93 ஆயிரத்து 786 நபர்கள் ஆவார்கள், பெண்கள் மட்டும் 7 லட்சத்து 48 ஆயிரத்து 520 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 நபர்கள் ஆவார்கள். இன்று மட்டும் கொரோனாவால் ஆண்கள் 19 ஆயிரத்து 725 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 15 ஆயிரத்து 758 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 25 ஆயிரத்து 196 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 15 லட்சத்து 27 ஆயிரத்து 733 நபர்களாக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 422 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 467 ஆகவும், நேற்று 448 ஆகவும் பதிவாகிய நிலையில் இன்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக 422 ஆக உயிரிழப்பு குறைந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 182 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். 240 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இன்றைய உயிரிழப்பு மூலம், தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரசால் 6 ஆயிரத்து 379 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

25-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல அனுமதியில்லை - தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதியதாக பதவியேறறுக் கொண்ட தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஊரடங்கு என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததாலும், தினசரி உயிரழப்பு 400 என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு முட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலைத்தொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலை பணியாளர்கள் பணிக்கு சென்றுவர ஏற்கனவே இ-பதிவு முறையில் https://eregister.tnega.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இ பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் பணியாளர்கள் பணிக்கு சென்று வர 25-ந் தேதி முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதலால், இந்த தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்துவர நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த நான்கு சக்கர வாகனங்களை இ-பதிவு முறையில் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இ பதிவு செய்து அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வாகனங்களை அனுமதிப்பார்கள். இரு சக்கர வாகனங்களின் அனுமதிகளைத் தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான இ பதிவு தானாகவே புதுப்பிக்கப்படும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள், மருந்து, ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சரக்கு போக்குவரத்திற்கு மட்டும் இந்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காகவும், தளர்வில்லாத ஊரடங்கை முழு அளவில் செயல்படுத்தவும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 34 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,448 நபர்களுக்கு கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 1,903 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், புதுவையில் கடந்த மாதம் குணம் அடைவோர் வீதம் 91 சதவீதமாக இருந்தது. தற்போது அது 77 ஆக குறைந்துள்ளது. இன்று மட்டும் அந்த மாநிலத்தில் 34 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை 1,359 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

தமிழகத்தில் கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் தமிழகத்தில் எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.


அப்போது, அவர் இந்த கூட்டத்தில் பேசியதாவது:-


“ தமிழகத்தில் நாளை முதல் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு நடக்கும் கூட்டம் இது. இந்த தொற்று நோய் காலத்தில் மாவட்டங்களில் மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, மற்றும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றி வம் உங்களுக்கு பாராட்டுக்கள்.


கொரோனா நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முதலில் உறுதி செய்ய வேண்டும். நாளை முதல் நமது மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த சூழலில், மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளை வழங்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தேவையான தரமான உணவுப்பொருட்கள், பால், குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும் பால் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.


வீதிகளில் வாகனம்/ தள்ளுவண்டிகளில் காய்கறிகள, பழங்கள் விற்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் கண்காணித்து வர வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலமாக வீட்டுக்கு வீடு சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து நோய்த்தொற்றை கண்டறியும் முகாம்கள் நடத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேணடும்.   


நோயாளர்கள், நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை ஆகியவற்றை அடைவதில் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகளை எந்தவித தொய்வுமின்றி மேற்கொண்டு செல்லும் நடவடிக்கைகளை தொடர வேண்டும்.


மக்களிடையே நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை அயராது தொடர வேண்டும்.


ஊரடங்கு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம் அனுமதிக்கப்பட்ட பணிகளான விவசாய இடுபொருட்கள், வேளாண் விளைபொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்து எந்த தடையும் இல்லாமல் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் மாவட்டங்களில் உள்ள மக்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்களை பெற்றும் கட்டுப்பாடு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தும் செயல்படலாம்.


அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் இருப்பைத் தொடர்ந்து கண்காணித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து மாவட்டத்தில் நோய்த்தொற்று சதவீதத்தை குறைப்பது ஒன்றே குறிக்கோளாக செயல்பட வேண்டும்.


இந்த காலத்தில் அரசுடன் இணைந்து செயலாற்ற பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றன. மாவட்ட அளவில் அவர்கள் பணியை ஒருங்கிணைத்து மக்களுக்கு அவர்களின் சேவையை கொண்டு சேர்க்க நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். அதற்கென மாவட்ட அளவில் ஒரு தனி அலுவலரை நியமிக்கலாம்.


தமிழ்நாட்டு மக்களின் உயிர்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு, அது மேலும் பரவாமல் தடுப்பதற்கு அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் அந்த சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. அதற்காகவே, இந்த முழு ஊரடங்கு. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவே இந்த ஊரடங்கு.


மாவட்ட ஆட்சியர்கள் நீங்கள் உங்களது இத்தனையாண்டு கால அனுபவம், அறிவு, சக்தி, திறமை அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை ஆற்ற வேண்டும். “


இவ்வாறு அவர் பேசினார்.


 


 

ஊரடங்கு காலம் முழுவதும் 4380 வாகனங்களில் வீடுதோறும் காய்கறி விற்பனை

மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையை பூர்த்தி செய்திட தமிழகம் முழுவதும் விரிவான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும்

சைதாப்பேட்டையில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களும், படுக்கை வசதிகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய 130 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்களில் இதுபோன்ற ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளது.  

ஸ்புட்னிக் தடுப்பூசியை புதுச்சேரியிலே தயாரிக்க வேண்டும் -ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

நாடு முழுவதும் கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,புதுவை அரசு முழுமையாக பொறுப்பு ஏற்காத நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை கண்காணித்து வரும் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஸ்புட்னிக் தடுப்பூசி, 2 டிஜி கொரோனா தடுப்பு மருந்துகள் நிறுவனத்திடம் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தை புதுச்சேரியில் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்தது

இந்தியாவின் வட மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. கிழக்கு இந்தியா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கின்றன.       


டெல்லியில் மே 31 தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா முழு ஊரடங்கு வரும் மே 31 தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா நோய்த் தொற்று நிலவரம்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 5559 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  தற்போது, 49,236 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  மேலும், சென்னையில் 10 லட்சம் மக்கள் தொகையில் சராசரி 6,276 பேருக்கு கொரோன நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை 5,129 ஆக உள்ளது. 

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்ப்பட்ட ஆறு பெரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.        

தேவையான காய்கறிகள் பழங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு

தமிழகத்தில் நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்  நிலையில்  பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்களை அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்ய நடவடிக்கை  எடுக்கப்படும்  என  மாநில அரசு உறுதியளித்துள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கோவிட் தொற்று பாதிப்பு.

கிட்டத்தட்ட சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் ( சோலிங்கநல்லூர் மண்டலத்தைத் தவிர) 7 நாள் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சென்னையின் 7 நாள் கூட்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 2.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.     


 



      

இந்தியாவில் 85 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டம்

இந்தியாவில் 85 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

மே இறுதியில் கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும்

தமிழகத்தில் மே மாத இறுதியில் இருந்து, கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று கணிக்கப்படுகிறது.    


தமிழகத்தில் கடந்த 80 நாட்களில் 8000 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 448 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 20,046 ஆக அதிகருத்துள்ளது.


கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில் இருந்து, கிட்டத்தட்ட 8000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. (வெறும் 84 நாட்களில்)  


கடந்த 24 மணி நேரத்தில் உயர்ரத்த அழுத்தம், நீரழவி, இருதய நோய் போன்ற எந்த இணை நோய்கள் இல்லாத 125 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்  


ராமநாதபுரம் மாவட்டத்தில், எந்தவித இணை நோய்களும் இல்லாத  18 வயது நிரம்பிய நபர் ஒருவர் கொரோன நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, மதுரையில் 24 வயது நிரம்பிய பெண் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானார்.            


மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகபட்சமாக, தினசரி பாதிப்பு உள்ளது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டரியப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 35,873 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கடுத்தபடியாக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தினசரி எண்ணிக்கை அதிகமாக உள்ளது .        

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா  தடுப்பூசி  செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்  துறை அமைச்சர்  சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இரவு 11.45 மணிவரை அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி

தமிழகம் முழுவதும் இன்று இரவு 11.45 மணி வரை அரசுப்பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Background

Tamil nadu Corona Latest News Live Updates:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொரோனா பரவல் தொடர்பாக மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஊரடங்கை இரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்தது. இதற்கடுத்து, தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, பொதுமக்களின் வசதி கருதி, மாநிலம் முழுவதும் நேற்று இரவு 9 மணிவரை அனுமதிக்கப்பட்டது. இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும் அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது.


 





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.