தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இன்று புதிய திட்டங்களையும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலீட்டு மாநாடு:
இன்று நடக்கும் இந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 17 ஆயிரத்து 616 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ரூபாய் 51 ஆயிரத்து 157 கோடி ரூபாய் மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிககல் நாட்டினார். முதலமைச்சர் தொடங்கி வைக்கும் இந்த திட்டங்களால் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பிடத்தக்க விஷயமாக ரூபாய் 36 ஆயிரத்து 238 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட செம்ப்கார்ப் பச்சை ஹைட்ரஜன் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய தொழிற்சாலை மூலமாக 1,511 இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உருவாக உள்ள இந்த தொழிற்சாலை மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 ட்ரில்லியன் பொருளாதாரம்
சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த புதிய தொழிற்சாலைகளுக்கான அடிக்கல் மற்றும் தொடக்க விழா மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதாரமான 1 ட்ரில்லியன் டாலர் நோக்கி செல்லும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில்துறை அமைச்சர், மற்ற அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அவர் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.