தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, லேசான மயக்கம் ஏற்பட்ட காரணத்தினால் கிண்டியில் உள்ள கலைஞர்  நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சரின் உடலில்  சர்க்கரை அளவு குறைந்த காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். விரைவில் மா. சுப்பிரமணியனின் உடல்நலம் தொடர்பாக  விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல்நலனில் அதிக அக்கறை கொண்ட மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி அரசு சார்பில் நடைபெறும் மாரத்தான்களில் கூட பங்கேற்றுள்ளார். 


திமுக ஆட்சி அமைந்ததும் மக்கள் நல்வாழ்வு அமைச்சராக பொறுப்பேற்ற மா. சுப்பிரமணியன், கொரோனா காலகட்டத்திலும் மும்முரமாக செயல்பட்டார்.  ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்களிடையே நன்கு அறிமுகமான அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். உடற்தகுதியிலும் மிகுந்த அக்கறை கொண்டவராக திகழ்கிறார்.  இந்த நிலையில் தான் திடீரென மா. சுப்பிரமணியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 


நேற்று கூட சைதை தொகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் 50 பேர் உலக சிலம்பு விளையாட்டு சங்கத்தின் 4th State Level open Silambam championship இல் வென்ற கோப்பைகளுடன், அமைச்சர் மா. சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்று இருந்தனர்.