தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த  மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் 28-ந் தேதி வரை அமலில் இருந்த ஊரடங்கு வரும் ஜூலை 5-ந் தேி வரை நீட்டிக்கப்படுவதாக ஏற்கனவே முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி, புதிய ஊரடங்கு விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.


இந்த புதிய ஊரடங்கில் ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டுள்ளபடி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் முதல் வகையிலும், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர் உள்பட 23 மாவட்டங்கள் இரண்டாம் வகையிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மூன்றாம் வகையிலும் பிரிக்கப்பட்டுள்ளன.


இந்த மூன்று வகை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை என அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படாத முதல் வகையில் இடம்பெற்றிருந்த கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறப்பதற்கும், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் வயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.




ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். பொதுப்போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கல்விப்புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் பாத்திரக்கடைகள், தையல் கடைகள், வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கம் செய்யும் கடைகளுக்கும் இன்று முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


வகை 2ல் இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த தளர்வு பொருந்தும். 




வகை 2ல் உள்ள மாவட்டங்களுக்கு  வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்


* பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.


* செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.


* கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.


* சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை  அனுமதிக்கப்படும்.


* அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.


* மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.


* மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.




சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்கனவே கடந்த 21-ந் தேதி முதல் பேருந்து சேவைகள் அமலில் இருந்து வருகிறது.


இந்த நிலையில், புதிய ஊரடங்கு விதிகளின் படி இரண்டாம் வகையில் இடம்பெற்றுள்ள 23 மாவட்டங்களிலும் இன்று காலை 6 மணிக்கு பொதுப்போக்குவரத்து தொடங்கியது. இந்த போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் நடைபெற்று வருகிறது.


மாவட்டத்திற்குள் இயங்கும் பேருந்துகளும், மாவட்டங்களுக்கு இடையே இயங்கும் பேருந்துகளும் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.


மூன்றாம் வகையில் இடம்பெற்றுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை முதல் வழிபாட்டுத் தலங்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.


மேலும், முதல் வகையில் இடம்பெறுள்ள மாவட்டங்களில் வணிக வளாகங்கள் இயங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை வணிகவளாகங்கள் (திரையரங்குகள் நீங்கலாக) செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள், கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால், பேருந்து சேவைகள் இயங்காத 11 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்கள் பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.