அனைத்து அரசு பள்ளிகளுக்குமான காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்:


முதலமைச்சர் ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, மாணவர்களுடன் அமர்ந்து, முதலமைச்சர் கிச்சடி உண்டு மகிழ்ந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தார் அமைச்சர் உதயநிதி. இதேபோன்று,  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அந்தந்த தொகுதியில் உள்ள பள்ளியில் நடைபெறும் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் செய்துள்ளனர்.


காலை உணவு திட்டம்:


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.  காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


விரிவாக்க திட்டம்:


இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதோடு காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தான் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த உத்தரவிட்டார்.


ரூ.500 கோடி ஒதுக்கீடு:


திட்ட விரிவாக்கத்திற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் துணை நிற்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த திட்டத்துக்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதன்படி, திட்டத்தின் பணிகளை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அளவில் ஒரு ஆசிரியரை பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. முதலமைச்சர் ஸ்டாலினும் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் திட்ட விரிவாக்கத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், அதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.