TN Medical College: தமிழ்நாட்டின் 6 புதியதாக மருத்துவக் கல்லூரிகள் எந்தெந்த  மாவட்டங்களில் அமைய உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகள்:

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அவை அனைத்தும் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 74 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகள், 1 எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்), 2 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள் அடங்கும். அரசு மருத்துவக் கல்லூரிகள் 5600 எம்பிபிஎஸ் இடங்களை வழங்குகின்றன, அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 6350 எம்பிபிஎஸ் இடங்களை வழங்குகின்றன. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் மேலும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

6 புதிய மருத்துவக் கல்லூரிகள்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை தொடங்கிவைத்தபிறகு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க கடந்த ஆண்டே மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைச்சர் கூறியுள்ள தகவலால், புதிய மருத்துவமனைகளுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது.

புதிய உச்சத்தில் தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவில், அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் தான், மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளும் வேகமெடுத்துள்ளன. ஒரு வேளை புதிய கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால், குறிப்பிட்ட 6 மாவட்ட மக்களுக்கும் உயர்தரமான சிகிச்சை மிக எளிதில் கிடைக்கும். அதோடு, மருத்துவ படிப்பிற்கான இடங்களும் குறைந்தபட்சம் 300 இடங்கள் அதிகரிக்கும். இதன் மூலம் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் தமிழக மாணவர்களுக்கு அதிகரிக்கும்.

நிலம் கையகப்படுத்தும் பணிகள்:

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு மே மாதமே நடைபெற்றது. அதன் முடிவில்மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 3 இடங்களில் முதல் கட்டமாக பணிகளை முடிக்கவும், பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 பகுதிகளில் 2-ம் கட்டமாக பணிகளை முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ‘பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக் ஷா யோஜனா’ என்ற மத்திய அரசின் நிதி பங்கீட்டின் கீழ் இந்த புதிய மருத்துவ கல்லூரிகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டமே இல்லை என்ற சூழலை உருவாக்க அரசு முயன்று வருகிறது. 

25 ஏக்கர் நிலம்:

அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கு 25 ஏக்கர் நிலத்தை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையான உபகரணங்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகிய விவரங்களை சேகரிப்பது குறித்தும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்துக்கு கூடுதலாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவருவது குறித்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் இடம் தேர்வு மற்றும் தேவையான இடத்தை கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்தும் தயார் நிலையில் வைத்த பின்னர் தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து, தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் 6 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள்: 

எண் மருத்துவக் கல்லூரி விவரங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு
1 மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை       1954
2 தேனி அரசு மருத்துவக் கல்லூரி, தேனி 2006
3 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மதுரை
4 தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி 2000 ஆம் ஆண்டு
5 கே.ஏ.பி. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி 1998
6 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி 1965
7 மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை 1835
8 கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் 1966
9 கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை 1960
10 தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் 1959
11 ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, அண்ணாமலைநகர் 1985
12 செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு 1965
13 ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை 1838
14 கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி, ஆசாரிப்பள்ளம் 2003
15 அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் 2005
16 அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, பெருந்துறை (முன்னர் IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரி) 1992
17 அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்- 30 1986
18 தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி, தர்மபுரி 2008
19 அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் 2021
20 அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் 2021
21  அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி 2021
22  ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி 2021
23  அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் 2021
24  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி 2021
25 அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் 2021
26  அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் 2021
27  அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் 2021
28  நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி 2021
29  கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி 2021
30  அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் 2019
31  அரசு மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை, தமிழ்நாடு 2017
32  அரசு மருத்துவக் கல்லூரி & ESIC மருத்துவமனை, கோயம்புத்தூர், தமிழ்நாடு. 2016
33  அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் 2015
34  அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை 2013
35  ESIC மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, KK நகர், சென்னை  2013
36  அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை 2012
37 திருவாரூர் அரசு. மருத்துவக் கல்லூரி, திருவாரூர் 2010
38 விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் 2010