படிப்பு, வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து வெளியூர்களில் தங்கி வருகின்றனர். சென்னை. கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், நெல்லை போன்ற பெருநகரங்களில் இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.


தமிழக அரசின் ப்ளான்:


இதனால் அதுபோன்ற தருணங்களில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கே பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுவதால் வட தமிழக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சி எடுத்துள்ளது.


இதன்படி, தமிழக அரசு இதுபோன்ற காலகட்டங்களில் தனியார் பேருந்துளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கிராமப்புற பேருந்துகள், வட தமிழக பேருந்துகள் தொலைதூரங்களுக்கு மாற்றி இயக்கப்படும் சூழலில் இந்த தனியார் பேருந்துகளை அந்த பேருந்துகளுக்கு மாற்றாக இயக்க திட்டமிட்டுள்ளனர். அந்த பேருந்துகளுக்கான ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை அரசே நியமித்து இயக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

பயணிகள் மகிழ்ச்சி:


சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு எத்தனை முறை தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கு அதற்கான தொகையை வழங்கவும் தமிழக அரசு முடிவுடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் பலன் பெறுவார்கள். விழாக்காலங்களில் சென்னையில் இருந்து விழுப்புரம், பெரம்பலூர், உளுந்தூர் பேட்டை, திருவண்ணாமலை, செஞ்சி போன்ற பகுதி மக்கள் தங்கள் ஊர்களுக்கு பேருந்துள் கிடைக்காமல் அவதிப்படுவது அரங்கேறி வருகிறது. அரசின் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் பயணிகள் சிரமம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளையில் இருந்தும் பயணிகள் தப்பிக்க முடியும் என்றும் கருதப்படுகிறது. பொதுவாக விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறையிலும் லட்சக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்தே வெளியூர்களுக்கு செல்வார்கள்.  இதற்காக அரசு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளையும் இயக்கும். ஆனாலும், பயணிகளுக்கு போதுமான அளவு பேருந்துகள் இல்லாமல் அவதிப்படும் சூழல் உண்டாகிறது.