தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகப்பெரிய பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையானது தமிழர்களின் அடையாளமாக திகழ்கிறது. நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 17ம் தேதி விடுமுறை:
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 17ம் தேதி ( வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்படுதவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகையை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவார்கள். வெளியூர்களில் வசிக்கும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
தொடர் விடுமுறை:
நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி பிறக்கிறது. 14ம் தேதி தைப்பொங்கல் ஆகும். 15ம் தேதி மாட்டுப்பொங்கல் ஆகும்.16ம் தேதி காணும் பொங்கல் ஆகும். செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை நாளில் வரும் இந்த 3 பண்டிகைகளும் அரசு விடுமுறை ஆகும்.
மக்கள் வசதிக்காகவும், வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் போதிய நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசு ஜனவரி 17ம் தேதியையும் விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.
மகிழ்ச்சியில் மக்கள்:
செவ்வாய், புதன் கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு விடுமுறை ஆகும். மேலும், பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் இருந்தே மக்கள் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்குவார்கள். இதனால், பொங்கலுக்கு முந்தைய வாரமான சனி, ஞாயிறு ஏற்கனவே வார விடுமுறையாக உள்ள நிலையில், திங்கள் மட்டுமே பணி நாள் ஆகும். அந்த நாளிலும் சிலர் பணிக்கு விடுப்பு எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், பொங்கலுக்கு முந்தைய வாரமான சனிக்கிழமை முதல் பொங்கல் முடிந்து அந்த வாரம் ஞாயிறு வரை 10 நாட்கள் விடுமுறை என்பதால் ஊருக்குச் செல்பவர்கள் குஷியடைந்துள்ளனர். வெளியூர்களில் தங்கி படிப்பவர்கள், குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட போதுமான அளவு விடுமுறை கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில்களும் ரயில்வே சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட உள்ளது.