அனைத்திற்கும் ஆதியாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


கிரிவலப்பாதையில் தர்கா:


இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சொந்தமான கிரிவல பாதையில் புதியதாக முளைத்துள்ள தர்கா. இப்போது தர்கா அடுத்து வக்பு சொத்து. அடுத்து அந்த மலையே தர்காவுக்கு சொந்தம்னு சொல்லுவாங்க என்று காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா?


இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இது முற்றிலும் பொய்யான தகவல். தர்கா அமைந்துள்ள இடமானது திருக்கோயிலுக்கு தொடர்புடையது அல்ல என்றும், சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தர்கா இருப்பதாகவும் திருவண்ணாமலை நகர நில அளவை பதிவேட்டின்படி தெரியவருகிறது. 






நகர கணக்கெடுப்பு பதிவேட்டில் குறிப்பு கலத்தில் மசூதி கட்டிடம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் திருக்கோயில் உள்ள இடம் குறித்து பரவி வரும் தகவலானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என்று அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். 

வெறுப்பை பரப்பாதீர்கள்:


மேலும், இந்த விளக்கத்தின் கீழே வெறுப்பை பரப்பாதீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமீபகாலமாக சில விஷமிகள் மக்கள் மத்தியில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக மத ரீதியிலான மோதல்களையும், சாதிய ரீதியிலான மோதல்களையும் ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்று அவதூறுகளையும், பதற்றத்தையும் ஏற்படுத்துபவர்கள் மீதும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகி்ன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு வழக்கமான நாட்களிலே பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். பிரதோஷம், மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கோயிலில் காணப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.