தமிழ்நாடு அரசு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் புராதன சின்னங்களாக உள்ள கோயில்களை பராமரிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க ஆகிய ஆட்சிகளில் பல்வேறு கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமான கோயில்களில் குடமுழுக்கு உள்ளிட்ட பல விசேஷங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
300 ஆண்டுகள் பழமையான கோயில் இடிப்பா?
இந்த நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. அவர்களது ட்விட்டர் பக்கத்தில், "“திருவையாறு பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான சிவராமர் திருக்கோயிலை தி.மு.க. அரசின் நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, பா.ஜ.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு மிக மோசமான நிலைமையில் இருந்த சிவராமர் திருக்கோயிலை தூய்மையான நிலைக்கு மாற்றி உள்ளனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை இந்த கோயிலை இடிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை தஞ்சை வடக்கு பா.ஜ.க. சார்பில் மிக கடுமையாக கண்டிக்கிறோம். இந்த முடிவைத் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
எக்காரணம் கொண்டும் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை இடிப்பதற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. என்றும் அனுமதிக்காது.” என்று கூறியிருந்தனர். பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது.
உண்மை என்ன?
இதுதொடர்பாக, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ திருவையாறு பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான சிவராமர் திருக்கோவிலை அரசின் நெடுஞ்சாலைத்துறை இடிப்பதற்கு முடிவெடுத்துள்ளது. என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இது திரிக்கப்பட்ட தகவல் ஆகும்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் மாநில நெடுஞ்சாலையான SH-22 மேற்கில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து தனியாரால் ராமர் பாதம் ஆலயம்( அருள்மிகு சிவாலயம்) கட்டப்பட்டுள்ளது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் ஆலய நிர்வாகிக்கு கால அவகாசம் வழங்கித் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்ற முறைப்படி தாக்கீது வழங்கப்பட்டு ஆலயத்திலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை என்று நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.