அருகிவரும் உயிரினமான ராஜாளிகளைப் பாதுகாக்க 10 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.


ராஜாளி அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. ராஜாளிகளைப் பாதுகாப்பதற்காக 10 பேர் கொண்ட மாநில அளவிலான குழுவை தமிழக அரசு புதன்கிழமை அமைத்தது. "ராஜாளி பாதுகாப்புக் குழு" என்ற பெயரில், காடுகளின் தலைமைப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


 "ராஜாளிகள் இருக்கும் இடங்களைக் கண்காணித்து, அந்த உயிரினத்தைப் பாதுகாத்து, மீட்டெடுக்கும் பணியில் இந்தக் குழு செயல்படும். ராஜாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, அவை வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் பணியில் இந்தக் குழு ஈடுபட வேண்டும்" என்று சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்தக் குழு, “ராஜாளிகளின் பாதுகாப்புக்கான தமிழ்நாடு செயல் திட்டத்தை (TNAPVC)” தயாரித்துச் செயல்படுத்தும். அத்துடன், ராஜாளிகளுக்கு தீங்கு இழைக்கும் நச்சு மருந்துகளைத் தடை செய்வதற்கான ஒழுங்குமுறையை வகுக்கும்.


இந்தியாவில் ராஜாளிகளின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. கால்நடைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் ராஜாளிகளுக்கு நஞ்சாக மாறி விடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்தக் குழுவில் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்களும் உள்ளனர். மேலும், கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் மற்றும் ராஜாளி பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓக்கள்) இடம்பெற்றுள்ளன.


இந்தக் குழுவின் பிற பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:


ராஜாளிகளை மீட்டு மறுவாழ்வு அளிப்பது, இனப்பெருக்க மையங்களை அமைப்பது, ராஜாளி பாதுகாப்புக்காக பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், கால்நடை குவியல்களின் அறிவியல்பூர்வ மேலாண்மையைக் கவனத்தில் கொள்ளுதல், கால்நடைகளின் சடலங்களின் மாதிரியைப் பகுப்பாய்வு செய்தல், நாடு தழுவிய ராஜாளி கணக்கெடுப்பில் பங்கேற்றல், ராஜாளிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகரித்தல் ஆகியவை இந்தக் குழுவின் பிற முக்கிய பொறுப்புகள் ஆகும்.


சுப்ரியா சாஹு ஐஏஎஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: 
ஒன்பது வகையான ராஜாளிகள் இந்தியாவில் காணப்படுகின்றன, அவற்றில் ஓரியண்டல் வெள்ளை நிற முதுகு கொண்ட கழுகு, நீளமான  அலுகைக் கொண்ட ராஜாளி, சிவப்புத் தலை ராஜாளி மற்றும் எகிப்திய ராஜாளி போன்ற நான்கு இனங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் முதுமலையில் உள்ள சிகுர் பீடபூமியில் தான் கடைசியாக ராஜாளிகள் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. தோராயமான மதிப்பீடுகள் படி, 200 ராஜாளிகள் மட்டுமே தமிழக காடுகளில் எஞ்சியுள்ளன என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.