தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி அதே பகுதிகளில் நிலவுகிறது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தயார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தல்:
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் விரிவான அறிக்கையை குறிப்பிட்டு, சென்னை பெருநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சியின் ஆணையர்கள் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், பேரிடர்களை எதிர்கொள்வதற்கான, நிலையான இயக்க நடைமுறைகளை மேற்கொள்ளவும், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாக இயந்திரத்தையும் துரிதப்படுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அதனால் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியின் செயற்கைகோள் காட்சிகள் (courtesy: imd)
நாளைக்கான மழை வாய்ப்பு:
அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக - புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
21.11.22 தேதி மழைக்கான வாய்ப்பு
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை மறுநாள் கன முதல் மிக கனமழைக்கும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
22.11.22 தேதி மழைக்கான வாய்ப்பு
இதேபோன்று, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 22ம் தேதியன்று கன முதல் மிக கனமழைக்கும், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமாலை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.