ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. 


ஃபெஞ்சல் புயல்:


ஃபெஞ்சல் புயலானது கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் புதுச்சேரிக்கு அருகில் முற்றிலுமாக் கரையைக் கடந்தது. அப்போது சூறாவளி புயலாக மணிக்கு 70-80 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 90 கிமீ வேகத்திலும் காற்று வீசியது. 


இதனால் புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்  மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர்,  திருப்பத்தூர்,  கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்தது. 




இதனால் பெரும் பகுதிகள் கனமழையாலும் , சூறாவளிக்காற்றாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. மேலும், விவசாய நிலங்கள், பல வீடுகள்  , பாலங்கள் சேதங்களுக்கு உள்ளாகியதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். 


Also Read: TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?


தீவிரமான இயற்கை பேரிடர்:


இதையடுத்து, உடனடியாக நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ. 2,000 வழங்க தமிழ்நாடு அரசு தெரிவித்தது. உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண நிதியாக சுமார் ரூ. 7,000 கோடி கேட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில் , ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தை, தீவிரமான இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல், மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்காக பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இதனால் சீரமைப்பு பணிகளை மேலும் வேகமாக செயல்படுத்த முடியும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.