அமர்நாத் யாத்திரைக்கு சென்று மீண்டு வர முடியாமல் சிக்கியுள்ள தமிழர்கள் தங்கள் மீட்க உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை 


காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் உள்ள இயற்கை பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். காசிக்கு அடுத்தப்படியாக இந்துக்கள் பெரும்பாலனவர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் நடப்பாண்டுக்கான யாத்திரை கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கியது. 


இதற்காக உருவாக்கப்பட்ட செயலியில் அமர்நாத் யாத்திரை வழித்தடம், தட்பவெப்ப நிலை, ஆன்லைன் சேவை உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றது. 13 முதல் 70 வயதுக்கு உட்பட்ட அனைவரும் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் இருந்து வந்த பக்தர்களால் கடந்த ஜூலை 1ஆம் தேதி அமர்நாத் யாத்திரை கோலாகலமாக தொடங்கியது. 


காஷ்மீரில் கனமழை 


ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் கனமழை பெய்ய தொடங்கியது. மேலும் மோசமான வானிலை காரணமாக கடந்த ஜூலை 8 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய 2 வழித்தடங்களில் யாத்திரை நிறுத்தப்பட்டு, பக்தர்கள் அடிவார முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து 2 நாட்களுக்குப் பின் சூரியன் தென்பட்டதால் பால்டால் வழித்தடத்தில் மட்டும் யாத்திரை மீண்டும் தொடங்கியது. 


அதேசமயம் மழை காரணமாக பாறைகள் வழுக்கும் நிலை உள்ளதால் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள்  அமர்நாத் யாத்திரைக்காக கடந்த ஜூலை 2 ஆம் தேதி புறப்பட்டு சென்றனர். 8 ஆம் தேதி தரிசனம் முடிந்து திரும்பிய அவர்கள் மழை மற்றும் நிலச்சரிவில் நடுவில் சிக்கி தவித்தனர். பின்னர் ராணுவ வீரர்கள் உதவியுடன் பால்டால் என்ற இடத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இதனிடையே அமர்நாத் யாத்திரை சென்று ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் பக்தர்கள் தங்களுக்கு உதவுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முகாமில் கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி சிரமப்படுபவதாகவும் தெரிவித்துள்ளனர்.