சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பது போல உணர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் முதலமைச்சர்:
இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றுள்ளார். அடுத்தாண்டு தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்திற்கு தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் அவர் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து இன்று காலை ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.இதில் பேசிய அவர், “என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய சிங்கப்பூர் வாழ் தமிழ் உடன்பிறப்புகளே, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அடிக்கடி சொல்லுவார். தமிழை பல வார்த்தைகளால் அழைக்கத் தோன்றினாலும், தமிழை தமிழே என்றழைக்ககூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது என கூறுவார். அப்படிப்பட்ட தமிழ் உணர்வோடு சிங்கப்பூரில் செயலாற்றும் நம்முடைய அருமை நண்பர்கள் தமிழ் அமைப்புகள் சார்பில் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
தமிழர்கள் வாழாத நாடே இல்லை:
உங்களை பார்க்கும்போது மிகுந்த உற்சாகமடைகிறேன். கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருப்பதாக நான் நினைக்கிறேன். தமிழ்மொழியில் ஏற்பட்ட எழுத்து சீர்திருத்தத்தை முதலில் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது சிங்கப்பூர் தான். இங்கு தமிழ் நாளிதழ் தான் முதலில் தோன்றியது. சிங்கப்பூர் நாணயத்தில் தமிழ் உள்ளது. இப்படி சிங்கப்பூரில் தமிழ் நிறைந்திருக்க காரணமான சிங்கப்பூரின் முதல் பிரதமருக்கு தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
சிறிய தீவாக இருந்த இந்த ஊரை மிகக்குறுகிய காலத்தில் பொருளாதாரம், கட்டுமானம், தொழில், விமானப்போக்குவரத்து என பலவற்றில் உலகமே வியக்கும் வண்ணம் வளர்ச்சிக்கு வித்திட்டவர் முதல் பிரதமர் லி குவான்யூ. தமிழர் வாழாத நாடு இந்த பூமியில் இல்லை என்னும் அளவுக்கு தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான். இங்குள்ள தமிழர்களிடத்தில் பெரியார்,அண்ணா, கருணாநிதி ஆகியோர் சீர்திருத்த கருத்துகளை வளர்த்தெடுத்தார்கள்.
தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ, சாதியோ ஒருபோதும் பிளவுப்படுத்த முடியாது. இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு திமுக அரசு கலங்கரை விளக்கமாக உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.