தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதேபோல், அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு, பொது இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் என பல வன்முறை சம்பவங்கள் மர்ம நபர்களால் நடைபெற்ற வருகின்றன. இதனால் காவல்துறையினர் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர்.
குறிப்பாக, கோவை, திண்டுக்கல், தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களில் பா.ஜ.க. பிரமுகர்கள் இல்லம், அலுவலகம், இந்து முன்னணியினர் அலுவலகங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் அலுவலகங்கள் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று இருப்பது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வாகன சோதனை, பா.ஜ.க. பிரமுகர்களின் அலுவலகங்களில் பாதுகாப்பு என பல்வேறு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 11 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு:
சென்னையில் தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2 இடங்களில் குண்டு வீச்சு :
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்த இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான கல்யாண சுந்தரம் என்பவரது வீட்டில் முன்னதாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதேபோல், சேலத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசிச்சென்றனர். மதுரையில் அதிகாலை கிருஷ்ணன் என்பவரது வீட்டிலும் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
என்ன செய்கிறது காவல்துறை...?
அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த மாநிலமாக மாறி வருகிறது. அன்றோ, இன்றோ என்று அரிதான நடக்கும் சம்பவங்கள் தற்போது ஒரே நாளில் அவ்வபோது நடக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது தி.மு.க. ஆட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.