TN Assembly Session LIVE: கிண்டி காந்தி மண்டபத்திற்கு இரவு 7.30 மணிவரை அனுமதி : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..

ABP NADU Last Updated: 27 Apr 2022 03:48 PM
திரையுலகினருக்கு ’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’ - அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அறிவிப்பு

தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என அமைசர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அறிவித்துள்ளார்

சட்டம் என்பது மின்சாரம் போல, தொட்டா ஷாக் அடிக்கும் : அமைச்சர் ரகுபதி பேச்சு

சட்டம் என்பது மின்சாரத்தை போன்றது, தொட்டால் ஷாக் அடிக்கதான் செய்யும்; சிலர் அதை தொட்டுவிட்டு ஷாக் அடிக்கிறது என்று வருந்தினால் நாங்கள் பொறுப்பல்ல - சட்டத்துறை விவாதத்தில் அமைச்சர் ரகுபதி பேச்சு

மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் சிலை : அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் அரங்கம், சிலை அமைக்கப்படும் - அமைச்சர் சாமிநாதன் 

சினிமா படத் தலைப்புகள் குறித்த விவாதத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கிண்டல்!

திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த அமைச்சர் எ.வ.வேலு, ’’பொண்டாட்டி சொன்ன கேக்கனும்’’ என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்; அப்போதே அவருக்கு இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது - சினிமா படத் தலைப்புகள் குறித்த விவாதத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கிண்டல்

கிண்டி காந்தி மண்டபத்திற்கு இரவு 7.30 மணிவரை அனுமதி : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் கிண்டி காந்தி மண்டபத்திற்கு இரவு 7.30 மணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேரவையில் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் - மசோதா தாக்கல்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பாக சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான பரிந்துரைகளை அளிக்கவும், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயிந்த் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்படும் - பேரவையில் செந்தில் பாலாஜி அறிவிப்பு

செல்வப்பெருந்தகையை திமுக தூண்டி விடுகிறது - இபிஎஸ் குற்றச்சாட்டு

அவையில் எப்போது பேசினாலும் செல்வப்பெருந்தகை அதிமுகவை விமர்சித்தே பேசி வருகிறார். அதிமுகவை குறை சொல்ல சொல்லி செல்வப்பெருந்தகையை திமுக தூண்டி விடுகிறது - எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் அதிமுகவினர் தர்ணா - வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

தஞ்சை தேர் விபத்து தொடர்பாக பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

தஞ்சை தேர் விபத்து - சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

திருவிழாக்களில் போதிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. முன்னதாக, தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பேரூராட்சி, ஊராட்சியை இணைத்து மாநகராட்சி - ஆய்வு

பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, தருமபுரி நகராட்சியுடன் அருகில் உள்ள பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

தஞ்சை தேர் விபத்து - சட்டப்பேரவையில் இரங்கல்

தஞ்சை களிமேடு தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Background

கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி நிர்வாகம், சட்டம், செய்தி மற்று ஒலிபரப்புத்துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.