டாஸ்மாக் விசாரணை விவகாரத்தில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்தள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இது இடைக்கால தடைதான், விசாரணை நிச்சயம் நடைபெறும், மக்களின் வரிப் பணத்தை சுருட்டியவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.
டாஸ்மாக் சோதனை:
டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் என்ன.?
இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களுள் ஒருவரான கபில் சிபல், டாஸ்மாக் ஊழியர்கள் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில அரசு 41 எஃப்ஐஆர்-களை பதிவு செய்துள்ளது. இருப்பினும், அமலாக்கத் துறையினர் டாஸ்மாக் தலைமையகத்தில் சோதனை நடத்தி, நிர்வாக இயக்குநரை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர் என்று வாதிட்டார்.
டாஸ்மாக் அதிகாரிகளின் தனியுரிமையை மீறி, அவர்களின் தொலைபேசிகளின் குளோனிங் செய்து அமலாக்கப் பிரிவு எடுத்துள்ளதாக, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.
இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள்
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான ஏஎஸ்ஜி ராஜு இது ரூ.1000 கோடி மோசடி வழக்கு என்று கூறினார். இருப்பினும், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், முன்னறிவிக்கப்பட்ட குற்றம் என்ன என்று கேட்டார், மேலும் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுவதாகக் கூறி கடுமையாக கடிந்துக்கொண்டார்.
சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் சோதனைகள் நடத்தும்போது, அமலாக்கத்துறை ஊழியர்களையும் அதிகாரிகளையும் தொந்தரவு செய்ததாக டாஸ்மாக் கூறிய குற்றச்சாட்டுகளையும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நிராகரித்தது . சாட்சியங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க, இந்த மாதிரியான திடீர் சோதனைகளின் போது ஊழியர்களை தடுத்து வைப்பது நடைமுறை சார்ந்த விஷயம் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் டாஸ்மாக் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணை மற்றும் சோதனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தவிட்டனர். மேலும், கோடை விடுமுறைக்குப் பின் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும் அதை மதிக்கிறோம், ஆனால் இதை சிலர் அரசியல் ஆக்கிக் கொண்டிருப்பதால் கருத்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், இப்போது வந்திருப்பது இடைக்கால தடை தான் என்றும், மேலும் விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். மக்களின் வரிப்பணம் எந்த வகையிலும் சுரண்டப்படக் கூடாது என்றும், அப்படி வரிப்பணத்தை யார் சுருட்டினாலும், அதற்கு மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.