அறிஞர் அண்ணா என அன்போடு அழைக்கப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15) அனைத்து கட்சி தரப்பிலும் மிகவும் விமரிசையாக  கொண்டாடப்படுகிறது.  


அண்ணாவின் பிறந்ததினம்:


அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றன. அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், "சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது.


'மதராஸ் மாநிலம்' என்ற பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில். அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.


 






தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். அதோடு, கட்சிப் பாடலையும் வெளியிட்டார்.


அரசியல் பேசிய விஜய்:


ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி பிரதிநிதிகள் பதிவு செய்தனர். விஜயின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது.


ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதற்கிடையே, தவெகாவின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.


அந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை, சித்தாந்தம் ஆகியவற்றை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாகவே, அண்ணாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, தான் எந்த விதமான அரசியல் பேசப்போகிறார் என்பதை விஜய் தெளிவுப்படுத்தியுள்ளார்.