TVK Vijay: ‘பெற்ற குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருங்க’ - விஜய்க்கு எதிராக கொந்தளித்த தவெக நிர்வாகி!
அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா? என தவெக தலைவர் விஜய்க்கு ரஞ்சனா நாச்சியார் கேள்வியெழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் விவாகரத்து சர்ச்சை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நடிகை த்ரிஷா தான் என பலரும் விமர்சித்தனர். இதனிடையே திருமண நிகழ்ச்சிக்கு விஜய் த்ரிஷாவுடன் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேசமயம் தவெக மகளிர் தின விழாவில் இந்த பிரச்னையை மறைமுகமாக குறிப்பிட்டு விஜய் பேசினார்.
இது தன்னுடைய தனிப்பட்ட பிரச்னை என்பதால் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்காக சப்போர்ட் செய்து போராடி வருத்தப்படுவதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. நீங்கள் உங்கள் நேரத்தை என் தனிப்பட விஷயத்தில் செலவிடும் அளவுக்கு ஒர்த் கிடையாது என தெரிவித்தார். அவ்வளவு தான் விஜய் சங்கீதா விஷயத்தை ஒர்த் இல்லை என சொல்லி விட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
இந்த நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழக வெற்றி கழகம் சார்பாக நடந்த மகளிர் தினம் கொண்டாட்ட மேடையில் தலைவர் பல கருத்துகளை பகிர்ந்தார். அதில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், ‘அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை’ என்று கூறினார். அந்த ஒரு வாக்கியம் தான் இன்று எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? என்ற பல கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குடும்பத்தில் மட்டும் ஒலிக்காது. அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி அவர்கள் உங்கள் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன. ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன ?
ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன ஈற்றுக்கொள்வார்கள்? “திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம் என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா?
ஒரு தலைவர் உருவாக்கும் நடைமுறை, நாளைய அரசியலின் ட்ரெண்டாக மாறிவிடும். அதனால்தான் நான் கேட்கிறேன் தமிழக அரசியலில் நாம் உருவாக்க வேண்டியது மரபை மதிக்கும் கலாச்சாரமா? அல்லது மரபை மாற்றும் மோசமான ட்ரெண்ட் செட்டிங்களா? தமிழர் கலாச்சாரம் மரியாதையை கற்றுக் கொடுத்தது. அந்த மரியாதையை காக்கும் அரசியல் நான் தமிழகத்திற்கு தேவையான அரசியல் அந்த மரபை மாற்றும் வழியில் நாம் போகக் கூடாது.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள், அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது. தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள்.
நம் மதிப்பையும் மரியாதையும் நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அந்த மரியாதையை உயர்த்தவோ அல்லது மெதுவாகக் குறைக்கவோ செய்கிறது. சரியோ தவறோ அதைப் பற்றி பேசாமல் மௌனம் காப்பது அறிவுடைமை அல்ல. சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஏனெனில் மௌனம் பல நேரங்களில் ஒப்புதலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
அதனால் நம் மரபையும், நம் மதிப்பையும், நம் மரியாதையையும் காக்க தேவைப்படும் போது குரல் கொடுப்பதே ஒரு பொறுப்புள்ள சமூகத்தின் அடையாளம் மேலும் ஒரு தலைவனின் பண்பு. தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும். உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















