எழுத்தாளார் அஸ்வகோஷ் என்ற இராசேந்திர சோழன்(79) இன்று (01.03.2024) அதிகாலை காலமானார்.


தமிழ் இலக்கியம், நாடகம், இதழியல், மார்க்சியம் உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிப்பை ஆற்றினார்.எழுத்தாளர் இராசேந்திர சோழன்  1945 டிசம்பர்,17-ம் அப்போதைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட உளுந்தூர்பேட்டையில் பிறந்தார். தமிழ்த்தேசியப் பொதுவுடமைப் பார்வையாளர். வட தமிழ்நாட்டு அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதியவர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் என கலை இலக்கியம், அரசியல், அறிவியல், தத்துவம் என சமூக செயல்பாடுகளுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.


இவருக்கு கொஞ்ச காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை காலமானார். எழும்பூர் நீதிமன்றம் அருகே நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள அவரது மகனின் வீட்டில் இருந்து இன்று மாலை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் ஒப்படைக்கப்படுகிறது. அவரது உடல், அவர் விருப்பப்படி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்படுகிறது. 


சமூக செயல்பாடுகளில் ஈடுப்பட்டவரின் மறைவு இலக்கிய உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இராஜேந்திர சோழன் மார்க்ஸிட் கம்பூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய அமைப்புகள்டன் விலக்கம் ஏற்பட்டாலும் மார்க்சியம் சார்ந்த கள செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். 


அஷ்வகோஷ் மறைவிற்கு நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில். ”எண்பதாம் அகவையைத் தொடும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமாகிவிட்டார். அஸ்வகோஷ் என்கிற புனைபெயரிலும் அவர் எழுதினார். சிறுகதைகளைப் புதுப் பாணியில் எழுதி சாதனை படைத்த இராசேந்திர சோழன், டில்லி தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, நாடகப் பிரதிகளை உருவாக்கியவர்.


பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப்பெற்ற முற்போக்காளர். தீவிரமான மொழிப்பற்றாளரான இராசேந்திர சோழன், தெனாலி ராமன், மரியாதை ராமன் வரிசைக் கதைகளில் கூட, தன் பிரத்யேகப் பார்வையைப் பொருத்தி மறு உருவாக்கம் செய்தவர். அவருக்கு என் அஞ்சலி.” என்று தெரிவித்துள்ளார்.


இவரது தாய் மற்றும் தந்தை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். 1961- ல் பள்ளியிறுதி படிப்பை முடித்தார். சென்னையில் பல வேலைகள் செய்து வந்தார். தந்தையின் அறிவுறுத்தலின்படி, நான்காண்டுகளுக்குப்பின் 1965-ல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்தார். 1968-ல் இருபதாண்டுகாலம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார். 


இவருடைய மனைவி ராஜகுமாரி. இவருக்கு இரு மகளும் மகனும் உள்ளனர். மகள் சிதம்பரத்தில் வசிக்கிறார். மகன் ஆர்.பார்த்திபன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார். 


இராஜேந்திர சோழன் மார்க்ஸிட் கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய அமைப்புகளுடன் விலக்கம் ஏற்பட்டாலும் மார்க்சியம் சார்ந்த கள செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார். பின் நாளில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமானது. 'உதயம்', 'பிரச்சனை', 'மண்மொழி' போன்ற இதழ்களையும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது 'புற்றில் உறையும் பாம்புகள்' சிறுகதை மிகவும் சிறப்பான படைப்பாக கருதப்படுகிறது. மனிதர்களின் உளவியல் தொடர்பாக நுட்பமாக இந்த சிறுகதையில் குறிப்பிட்டிருப்பார். இலக்கியத்திற்கும் பெரிதும் பங்களித்தவரின் மறைவிற்கு எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்