கொட்டும் பேய் மழையில் தமிழ்ச் சங்க ரயில் துவக்க விழாவை நடத்தி, பயணிகளை ரயிலில் அனுப்பியது ஏன் என்று பிரதமர் மோடியிடம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டல அறிக்கையில், டிசம்பர் 11 அல்லது 12 ஆம் தேதிகளில் மிக அதிக மழை அல்லது மிகக் கனமழை பற்றிய எந்தக் தகவலும் இல்லை. டிசம்பர் 14 அன்றே மிகக் கனமழை பற்றிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. டிசம்பர் 17 ஆம் தேதி பிற்பகலில் மட்டுமே பெருமழை தொடங்கிய பிறகு தென் மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டது. 


இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி டிசம்பர் 12ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது. அப்படி இருந்தும் தூத்துக்குடி செல்லாமல், முதல்வர் டெல்லி வந்தது ஏன் என்று நிதியமைச்சர் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.


இந்த நிலையில், கொட்டும் பேய்மழையில் தமிழ்ச் சங்க ரயில் துவக்க விழாவை நடத்தி, பயணிகளை ரயிலில் அனுப்பியது ஏன் என்று பிரதமர் மோடியிடம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்ச்சங்க ரயிலின் துவக்க விழா எதற்கு?


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’நான்கு மாவட்ட மழை வெள்ளத்தைப் பற்றி 12ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர்.


அப்படியென்றால் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச் சங்க ரயிலின் துவக்க விழாவை பிரதமரே நடத்தி வைத்தாரே எப்படி?  கொட்டும் பேய் மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?


அன்றைய தினம் கடும் மழையால் தென்மாவட்டங்களில் பல ரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என ரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவு பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?






தமிழ்நாட்டு மக்கள்தானே என்ற மனநிலையா?


தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள்தானே என்ற மனநிலையா?


நிதியமைச்சரே! மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசை திருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப் பெறுங்கள்’’.


இவ்வாறு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.