‘இதயமே, இதயமே உன் மவுனம் என்னை கொல்லுதே’ என்ற பாடலை ‘இதயம்’ திரைப்படத்தில் எழுதி, காதலின் வலியை தன் வரிகள் மூலம் உணர்த்திய கவிஞர் பிறைசூடன், உடல்நலக்குறைவால் இயற்கை எய்திருக்கிறார்.
அவர் காலமானாலும் அவர் இயற்றிய பாடல்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பவை. 1956ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன், 1985ஆம் ஆண்டு வெளியான ‘சிறை’ திரைப்படத்திற்காக தன்னுடைய ’ராசாத்தி ரோசா பூவே’ என்ற பாடலை எழுதி, திரையுலகில் கால் பதித்தார். பின்னர் அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் திரையுலகில் கால் பதிக்க நினைக்கும் பாடலாசிரியர்களுக்கு வழிகாட்டி தடமாக அமைந்தது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எழுதத் தொடங்கிய பிறைசூடன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தேனிசை தென்றல் தேவா, சங்கர் கணேஷ் என பல்வேறு இசையமைப்பாளர்களின் மெட்டுக்கு எழுதி, சினிமா பாடல்களை மெருகேற்றியவர்.
இயக்குநர் சிகரம் பாலசந்தர் பிறந்த அதே நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன், தன்னுடைய முதல் கவிதையை அரங்கேற்றி, தன்னை கவிஞனாக உணர்ந்ததும் அதே பாலசந்தர் முன்னிலையில்தான். நன்னிலத்தில் நடைபெற்ற ஒரு திரையரங்கு திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பாலசந்தரை வரவேற்கும் விதமாக பிறைசூடன் வடித்த ’பாலசந்தர் கண்ணசைத்தால் கவிதை சென்னையிலேயே உருவாகும், எனை பார்த்து கண்ணசைத்தால் கற்பனையில் கவிதை வெள்ளம் கோடி வரும், அது உன் கனநேர கண் தயவால், கலையுலகில் நாளை ஒரு கோடி பெறும்’ என்ற கவிதையை அவர் படித்தபோது அரங்கம் அதிர கிடைத்த கைத்தட்டல்தான் பிறைசூடனின் முதல் விருது.
இளையராஜா தனது முதல் திரைப்படத்திற்காக இசையமைக்கும்போது எப்படி மின்சாரம் தடைப்பட்டுபோனதோ, அதே மாதிரிதான் பிறைசூடன் ‘சிறை’ படத்தில் எழுதிய தனது முதல் பாடல் ரெக்கார்டிங்கின்போது கரண்ட் கட் ஆகிப்போனது. ஆனால், சகுனமெல்லாம் கவிஞனை ஒன்றும் செய்யாது என்று கலங்கிய மனதை தேற்றிக்கொண்டார் அவர்.
தனக்கு திரைத்துறையில் முகவரியை ஏற்படுத்திக் கொடுத்தது இசைஞானி இளையராஜாதான் என்று எப்போதும் சொல்லும் பிறைசூடன், இளையராஜாவின் இசையில் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். அதேமனிதன், லக்கிமேன், ஒன்றும் தெரியாத பாப்பா, அமரன் உள்ளிட்ட பல படங்களில் இடம்பெற்ற அத்தனை பாடல்களையும் பிறைசூடனே எழுதும் பெரும் வாய்ப்பு, திறமை வாய்ந்த அந்த கவிஞனுக்கு கிடைத்தது.
’என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி ; எனக்கு சொல்லடி’, ‘மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா’, ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழலோரம்’, ’கலகலக்கும் மணியோசை, சலசலக்கும் குயிலோசை, மனதினில் பல கனவுகள் மலரும்’, ’மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி’ ‘தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’ போன்ற காதல் ரசத்தை சொட்ட வைத்த பாடல்களை வடித்து தந்தவர் பிறைசூடன். பாடல்கள் மட்டுமின்றி பல படங்களுக்கு வசனங்கள் எழுதியும் ’தாலாட்டு முதல் தாலாட்டு’ என்ற புத்தகம் எழுதியும் தமிழுக்கு புது தெம்பு கொடுத்தவர் அவர்.
சந்திரசேகர் என்ற தனது இயற்பெயரை 'பிறை சூடன்' என மாற்றிக்கொண்டு, திரையுலகில் முடிசூடிய பிறைசூடனின் மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழ் உலகிற்கே பெரும் இழப்பு..!