பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான தமிழர்கள் பாரதி பாஸ்கர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்ப் பேச்சாளரான பாரதி பாஸ்கர், சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். குறிப்பாக, பெண்கள் அதிகாரம் தொடர்பான அவரது வாதங்கள் அனைவரையும் கவரும் தன்மை உடையதாக இருக்கும். பொதுவாக, சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தனது வாதத்தை முன்வைப்பார்.
பாரதியின் உடல்நலம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில்" நேற்று, வழக்கம்போல அலுவலக பணிகளை மேற்கொண்டார். இரவில், தாங்கிக்கொள்ள முடியாத தலைவலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.டி ஸ்கேனில், மூளையில் ரத்தக்கசிவு மாதிரியான பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுது. அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை. ரத்தக்கசிவு பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பயப்பட வேண்டிய சூழல் இல்லை. விரைவில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்ற எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.
பாரதி பாஸ்கர், சென்னை அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப்பொறிஞர் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலைப் பட்டமும் பெற்றவர். சிட்டி வங்கியில் முக்கிய பதவியில் பணி செய்து கொண்டு வருகிறார். கல்கியில் சிறுகதைகள், தினமணியில் கட்டுரைகள், அவள் விகடனில் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு' என்ற தொடர்கட்டுரையும் எழுதியுள்ளார்.
குஷ்பு சுந்தர் ட்விட்டர் பதிவு:
நடிகை குஷ்புசுந்தர் தனது ட்விட்டரில், " சிறந்த தமிழ் பேச்சாளார் என்பதைத் தாண்டி சிறந்த அறிவுக்கூர்மைக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்றவர் பாரதிபாஸ்கர். திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். பாரதி பாஸ்கரனின் நகைச்சுவையான பேச்சு உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் வாழ்ந்து வருகிறது. தற்போது, மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள அவர், விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். உலகிற்கு அவரைப் போன்ற அழகான ஆன்மா தேவை" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், வாசிக்க: