தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பாகவே வீட்டைப் புதுப்பித்து, பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து நேற்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனிடையே இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவே வீடுகளில் வண்ண கோலமிட்டு மக்கள் பொங்கலை வரவேற்றனர். தொடர்ந்து அதிகாலையிலேயே எழுந்து புனித நீராடி  புத்தாடை அணிந்து விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மண்பானைகளில் பொங்கலிட்டு படைத்து வழிபட்டனர். 


மேலும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குழை, பனங்கிழங்கு, கரும்பு வைத்து பொங்கல் பொங்கி வந்தததும் “பொங்கலோ பொங்கல்” என உற்சாக குரலிட்டு மக்கள் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு அரசும் மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பை அறிவித்தது. 






இந்தநிலையில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், “சாதி-மத பேதமின்றி கொண்டாடும் இந்த பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்! தமிழ்-தமிழர்-தமிழ்நாடு நலன் காக்க உறுதியேற்போம்.” என பதிவிட்டுள்ளார். 


முதலமைச்சர் முக ஸ்டாலின் - பொங்கல் வாழ்த்து:


வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்! சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! #தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள!  முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 






மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்பம் பொங்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழர் திருநாள் இது..பொங்கல் திருநாள் இது.. உழவர் திருநாள் இது. உழவே தலை என வாழ்ந்த உழைப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றியவர்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தை நம்முடன் சேர்த்த வேட்டை சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு, மற்ற உயிரினங்கள் என அனைத்திற்கும் சேர்த்து கொண்டாடப்படும் ஒற்றை விழா தான் பொங்கல் பெருவிழா. கற்பனை கதை இல்லாத பண்பாட்டு திருவிழா. 


வானம் கொடுத்தது..பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான் நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலம் நாம் உலகிற்கு உணர்த்துகிறோம். ஏழை, பணக்காரர்,உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்த வேறுபாடும் இல்லாமல் கொண்டாடப்படும் சமத்துவ பெருவிழா தான் பொங்கல் பண்டிகை” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.