டிட்வா புயல் தமிழக கடற்கரையை நெருங்கிவரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட்டுகள் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிட்வா புயல் வலுவிழந்து காணப்படுவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவை தற்போத பார்க்கலாம்.
பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவு என்ன.?
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த புயல் வலுவிழந்து காணப்படுவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், டிட்வா புயல் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். வறண்ட காற்று மற்றும் செங்குத்து காற்றுத் தாக்குதலால் புயல் பலவீனமடைந்து ஒரு வெற்றுப் படலமாக உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மயிலாடுதுறையில் 140-220 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ள டெல்டாவின் பிற பகுதிகளிலும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்திலும் நல்ல மழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் மேகங்கள் இல்லாமல் வெற்றுப் படலமாகவே இருக்கும் என கூறியுள்ள அவர், வட தமிழ்நாட்டில் உள்ள KTCC (சென்னை பகுதி), வேலூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் பகலில் மீண்டும் மேகமூட்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், மாலை அல்லது இரவு நேரத்தில் புயல் சென்னையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.