தமிழ்நாட்டில் இன்று அனேக இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாட்டில் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் இன்றும் 40 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வேலூரில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று 42 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பில்லை என்றும் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  



16.05.2023 - 19.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவித்துள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை :


16.05.2023 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.


இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் 105.44° பாரன்ஹீட்,  சென்னை மீனம்பாக்கம் 105.44° பாரன்ஹீட், கடலூர்  102.92° பாரன்ஹீட், ஈரோடு 103.64° பாரன்ஹீட், கரூர் பரமத்தி 104.9° பாரன்ஹீட், மதுரை நகரம் 102.2° பாரன்ஹீட், மதுரை விமான நிலையம் 103.28° பாரன்ஹீட்,  நாகப்பட்டினம் 100.04° பாரன்ஹீட்,  பரங்கிப்பேட்டை 104.36° பாரன்ஹீட், நாமக்கல் 100.4° பாரன்ஹீட், பாளையங்கோட்டை 102.2° பாரன்ஹீட், சேலம் 102.02° பாரன்ஹீட், தஞ்சாவூர் 102.2° பாரன்ஹீட்,  திருச்சிராப்பள்ளி  103.1° பாரன்ஹீட், திருத்தணி105.8° பாரன்ஹீட், வேலூர் 108.14° பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


இன்று நண்பகல் நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியிள்ளது. 2020ஆம் ஆண்டிற்கு பின் அதிகபட்சமான வெப்பநிலை இதுவே ஆகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல் 2017 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. மோக்கா புயல் மற்றும் கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக கடந்த சில தினங்களாக வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. அடுத்த சில தினங்கள் இதே நிலை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.