Kanchipuram & Chengalpattu Rain Forecast Today: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டல சுழற்சியில் ஒரு பலவீனமான காற்று அழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்றைய வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை கனமழைக்கான வாய்ப்பு
நாளை செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தவிர, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட இன்றைய வானிலை நிலவரம் (ஆகஸ்ட் 17)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 17) அதிகபட்ச வெப்பநிலையாக 35°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27°C ஆகவும் பதிவாகக்கூடும். பகல் நேரத்தில் 20% மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு வேளையில் 50% வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு மாவட்ட இன்றைய வானிலை நிலவரம் (ஆகஸ்ட் 17)
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C ஆகவும் இருக்கும். பகல் வேளையில் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் 40% மழைக்கு வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் 60% வரை மழை பெய்யக்கூடும் என்பதால் இடியுடன் கூடிய கனமழை அல்லது மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
