மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, வார இறுதி மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் முதல் தமிழ்நாடு முழுவதும் 1100 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை இயக்கப்படும் என தமிழநாடு போக்குவரத்துகழகம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்குச் செல்ல 250 கூட்டுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 29ஆம் தேதி கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக 450 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக இருக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 


அதேபோல் சொந்த ஊரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு திரும்ப அக்டோபர் 2ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காலாண்டு விடுமுறை


 


1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விடுமுறை நீட்டிப்பு என்பது 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும்தான் என்றும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முறைப்படிதான் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வரை அதாவது வரும் புதன் கிழமை வரை காலாண்டுத்  தேர்வுகள் நடைபெற உள்ளன.  அதற்கு அடுத்த நாளான 28ஆம் தேதியில் இருந்து காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இந்த நிலையில்தான் பள்ளிக்கல்வித்துறை 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறையை அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 8ஆம் தேதிவரை நீட்டித்து அறிவித்துள்ளது. 


அதேபோல் 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வகுப்புகள் தொடரப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.