இந்திய நாட்டில் முதன் முறையாக மிதக்கும் காற்றாலை பண்ணை (கடலுக்கு மேல் மிதக்கும் காற்றாலை வசதி) தமிழகத்தில் நிறுவப்பட இருக்கிறது. முன்னதாக, டென்மார்க் நாட்டின் முக்கியமான முதலீட்டாளர்கள் கருத்தரங்கு சென்னையில்  நடைபெற்றது. இதில், மாநிலத் தொழில்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, டென்மார்க் நாட்டின் காலநிலை, எரிசக்தி மற்றும் பயன்பாடுகள் துறை அமைச்சர் டான் யானிக் யாகென்சன்  மற்றும் டென்மார்க் நாட்டின் தொழில் வணிகக் குழுவினர் கலந்து கொண்டனர். 


மிதக்கும் காற்று பண்ணைகள் ஒரு வழக்கமான காற்று பண்ணையை போன்றதே ஆனால் அவை கடலின் நடுவில் மிதந்து கொண்டிருக்கும். ஒரு மிதக்கும் காற்றாலை பண்ணை கொண்டு திறந்த கடலிலுள்ள காற்றை அதிக பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். மலை, மரம் மற்றும் கட்டிடங்கள் போன்ற எந்த தடைகள் இல்லாததால் திறந்த கடலில் காற்றின் வேகம் கடலோர பகுதிகளை காட்டிலும் இருமடங்கு வேகமாக இருக்கும். மின்சாரம் தயாரிக்க தற்போது பயன்பாட்டில் செயல்முறைகளை காட்டிலும் அதிகமாகவோ மிதவை காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று  நம்பப்படுகிறது. 


மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அங்குள்ள தீவுகளிலும் முதல்கட்டமாக இந்த மிதக்கும் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, டென்மார்க் நாட்டில் இருந்து 5 முதல் 10 பில்லியன் அமேரிக்கா டாலர் முதலீடு செய்ய உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    


 










 


முன்னதாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமான டான்ஜெட்கோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமை (ஐஆர்ஈடிஏ) கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் உருவாக்கம், ஏல செயல்முறை மேலாண்மை மற்றும் செயல்படுத்துதலில் தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை டான்ஜெட்கோவுக்கு ஐஆர்ஈடிஏ வழங்குகிறது. போதுமான மின்கல சேமிப்புடன் கூடிய 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், 3,000 மெகாவாட் நீர் மின்சார திட்டம் மற்றும் 2,000 மெகாவாட் வாயு சார்ந்த மின்சார ஆலை ஆகியவற்றை திறன்மிகு புதுப்பிக்கத்தக்க ஒருங்கிணைப்புக்காக டான்ஜெட்கோ திட்டமிட்டு வருகிறது. மேற்கண்ட திட்டங்களுக்கான உத்தேச கடன் தொகை ரூ 1,32,500 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.



டான்ஜெட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம்


சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும், விலை அதிகமான புதைபடிவ எரிபொருளுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகப்படியாக செலவிடுகின்றது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் புவி வெப்பமடைதலுக்கு காரணமாக புதைபடிவ எரிபொருள் தேவையினை குறைத்து, மின் தேவையினை நிறைவு செய்வது மட்டுமல்லாமல், மாநில மின் வாரியத்தின் நட்டத்தினை குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.