CM Stalin : தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரை போலவும் நானும் ஒரு தோனி ரசிகன்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், சர்வதேச அளவிலான வீரர்களை தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கடைளையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியானது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்  நடைபெற்றது.


தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கோப்பைக்கான இலச்சினை, சின்னம், கருப்பொருள் பாடலை வெளியிட்டார்.  இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.


”நானும் தோனி ரசிகர்தான்"


இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”சென்னையின் செல்லப்பிள்ளை தோனி. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரை போலவும் நானும் ஒரு தோனி ரசிகன்தான். சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த போட்டிகளைக் காண தோனிக்காகவே சென்றேன்.  அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் விளம்பரத்தூதராக நியமிப்பதில் பெருமை கொள்கிறேன்.


தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளையான தோனி, தொடர்ந்து சென்னை அணிக்காக ஆடுவார் என்று நம்புகிறேன். தோனி எளிமையான பின்னணியைக் கொண்டு கடினமான உழைப்பினால் முன்னேறியவர். இளைஞர்கள் அனைவருக்குமே ஒரு முன்உதாரணமாக இருக்கிறார் தோனி. இவர் சொந்த  உழைப்பால் வளர்ந்தவர். அதனால் தான் இன்று அவர் விளம்பர தூதராக உள்ளார்.  தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் பல தோனிகள் உருவாக வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


"உதயநிதி ஸ்டாலினை நம்புகிறேன்”


தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டுத் துறையின் வளர்ச்சியானது மிகப்பெரிய பிரமாண்டத்தை இரண்டு ஆண்டு காலத்தில் அடைந்திருக்கிறது. அமைச்சர் உதயநிதி பொறுப்பில் விளையாட்டுத் துறையானது மேலும் மாபெரும் எழுச்சியைப் பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்படுத்துவார் என்று உங்களைப்போல் நானும் நம்புகிறேன்"  என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேலும், ”விளையாட்டு என்பது தனிமனிதனின் திறமையாக மட்டும் இருப்பது இல்லை சமூகத்தின் கூட்டு பலத்தைப் பயன்படுத்துவதற்கும். தனிமனித சிறப்பை வளர்த்தெடுப்பதற்கும் ஓர் சிறந்த களம்.  அதனால்தான் அரசு அதற்கு அதிகப்படியான முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறது.


எனவேதான் விளையாட்டு வீரர்களுக்கு திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், உடல்தகுதி. தலைமைத் தகுதி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கித் தருவதைக் கடமையாகக் கருதுகிறோம். பள்ளிகள் மற்றும் பொதுச் சமூகம் மூலம் விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து அரசு அவர்களுக்கு உதவி வருகிறது. இதில் முதன்மையானதாக முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பைப் போட்டிகளைச் சொல்லலாம்” என்றார்.