ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். பின்பு, அங்கிருந்து மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டு சென்றார்.
மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் Victorian School of Languages பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு. வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனி துறை உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் புகழ் பாடிய சபாநாயகர் அப்பாவு:
உலகின் எந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்களானாலும், அவர்களுக்கு ஒரு சிறு இடர்பாடு ஏற்பட்டுவிட்டால், அந்தந்த நாடுகளில் இருக்கின்ற அயலக அணிகளின் மூலமாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டால், எத்தனை கோடி ரூபாய் செலவானாலும்கூட, நம்முடைய தமிழ்ச் சொந்தங்களை காப்பாற்றி கொண்டுவருகின்ற அற்புதமான பணிக்காக ஓர் அமைச்சரே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எங்களுடைய திருநெல்வேலி பகுதியிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அரபு நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வறுமையில் இருப்பதால், சம்பாதிப்பதற்காக அங்கே செல்வார்கள்.
மற்ற நாடுகளில் தமிழர் இருகிறார்கள், ஆனால், மலேசியாவில் மட்டும்தான் தமிழர்கள் அந்த நாட்டு மக்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்று அண்ணா அவர்கள் மலேசியா சென்றபோது சொன்னார். அந்தளவுக்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள் அதிகமானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது உங்களுக்கு என்ன தேவை என்பதை நம்முடைய முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் அதையும் உடனடியாக செய்து கொடுப்பார். ஒரு காலத்தில், ஏதேனும் ஒரு நாட்டிற்குச் சென்றவர். அங்கேயே இறந்துவிட்டால், அவருடைய உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 5 மாதம் அல்லது 6 மாதங்கள் ஆகும்.
"வாய்ப்பை உருவாக்கி கொடுத்த முதல்வர்"
ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர், அயலக தமிழர் நல வாரியம் அமைத்ததன் மூலமாக மத்திய அரசின் வெளியுறவுத் துறையை உடனடியாக தொடர்பு கொண்டு, மூன்றே நாட்களில், அந்த உடலை விமானத்தில் கொண்டு வருவதற்கான செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்கிறது.
அதுபோல், உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் படிக்க வேண்டுமென்பதற்காக பல்வேறு வாய்ப்புகளை முதலமைச்சர் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளில் தமிழை கற்பிக்காமல் போன வரலாறு உண்டு.
ஆனால், இப்போது கட்டாயமாக தமிழை கற்றுக்கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியதன் காரணமாக அங்கெல்லாம் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. நம்முடைய முதலமைச்சர் டெல்லி சென்றபோது, அங்குள்ள பள்ளிகளில் smart class room இருப்பதை நேரடியாக பார்வையிட்டதன் விளைவாக.
தமிழ்நாட்டிலும் அவ்வாறு உருவாக்க வேண்டுமென்பதற்காக கடந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் smart class room அமைக்கப்படும் என்றும், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் வசதி படைத்த மாணவர்கள் பெறும் வசதியை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பெற வேண்டுமென்பதற்காக அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார்" என்றார்.