தமிழ்நாட்டின் மூத்த காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) பிரஜ் கிஷோர் ரவி, தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1989 ஆம் ஆண்டை சேர்ந்த இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரி, ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று மாத காலம் உள்ள நிலையில் தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வுக்கு பின், அவர் காங்கிரஸில் சேர்ந்து தனது சொந்த ஊரான பீகார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிபி/காவல் படைத் தலைவருக்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சமீபத்திய காவல் தலைமை இயக்குநர் குழுவில், பிரஜ் கிஷோர் ரவி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த குழுவில் மூன்று டிஜிபிக்கள் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் சஞ்சய் அரோரா இடம் பிடித்துள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான தமிழ்நாடு கேடராக இருந்தார், இவர் தற்போது டெல்லி காவல்துறை ஆணையராக் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை காவல் இயக்குநராக பணியாற்றி வரும் பிரஜ் கிஷோர் ரவி, டிஜிபி அந்தஸ்தில் அரசியலில் சேரும் இரண்டாவது அதிகாரி ஆவார். சமீபத்தில், 1991 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான கருணா சாகர், பீகாரைச் சேர்ந்தவர். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். தற்போது அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் பல ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணி ஓய்வு காலத்தில் அல்லது விருப்ப ஒய்வு பெற்று அரசியலில் செய்லபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி ஆவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அதேபோல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியல் கட்சி ஒன்றை 2020 ஆம் ஆண்டு தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரஜ் கிஷோர் ரவி 34 ஆண்டுகளுக்கும் மேலான அவரது வாழ்க்கையில், போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவில் ஐ.நா.வுக்காக பணியாற்றியுள்ளார். மேலும் இரண்டு முறை ஐ.நா வின் அமைதிக்கான பதக்கத்தை வென்றுள்ளார். அவர் மத்தியப் பிரதிநிதியாகச் சென்று மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திலும் பணியாற்றி உள்ளார். பீகாரில் காங்கிரஸுடன் தொடர்புடைய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி.
சமீபத்தில் தமிழ்நாடு டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு பணி ஓய்வு பெற்றார். தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக பணியாற்றும் பட்டியலில் பிரஜ் கிஷோர் ரவியின் பெயர் இடம்பெற்றிருந்தது. பின் தமிழ்நாட்டின் டிஜிபியாக சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஜூலை மாதம் 1 ஆம் தேதி தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநனராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தான் விருப்ப ஓய்வு பெற்றதை உறுதிசெய்த, பிரஜ் கிஷோர் ரவி இது தொடர்பாக பேசுகையில், "ஒதுக்கப்பட்டோர் மற்றும் பிற்படித்தப்பட்டோருக்காக பணியாற்றி அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. இது சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறையில், உத்தியோக பூர்வமாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது பணியை பிரதிபலிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.