வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். கோடை வெயில் அதிகமாக இருப்பதால் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இதுபோன்ற காரணங்களால் மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மெகாபத்ரா தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில், 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சராசரியாக அதிகபட்ச வெப்ப நிலை நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, ஒடிசா மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரமால் தவித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் வரை இந்த வெயிலின் தாக்கத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதிய கற்பித்தல் நேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரை மாற்றியமைத்த நேரம் (திங்கட்கிழமை) இன்று முதல் அமலுக்கு வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்