TN Rains Breaking LIVE: மழை வெள்ளம் நிலவரம்- 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
TN Rains Breaking LIVE: தமிழ்நாட்டில் இன்று தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை தொடர்பான உடனடி தகவல்களை கீழே காணலாம்.
தென் பெண்ணை ஆற்றின் கொள்ளவு நிரம்பியதால், அணையில் இருந்து 2,800 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்வாய் கண்டிகை (திருவள்ளூர்), வீராணம் (கடலூர்), ஆண்டியப்பன் (திருவண்ணாமலை), மோர்தனா (வேலூர்), குண்டாறு (தென்காசி). சேத்துப்பாறை (தேனி), சோலையாறு (கோவை), வர்தமாநதி (திண்டுக்கல்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), மேட்டூர் (சேலம்) உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் கொள்ளவு 100 சதவீதம் நிரம்பியுள்ளன.
தமிழ்நாட்டில் தொடர் கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான அணைகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.
மேட்டூர் அணைக்கு 2.10 இலட்சம் முதல் 2.30 இலட்சம் கன அடி வரை வரை காவிரிநீர் வர வய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுத்தப்பட்டுள்ளனர்.
காவிரியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 2 இலட்சம் கன அடியாக உயர்வு.
தென் பெண்ணை ஆற்றிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,370 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
கொடைக்கானல் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருதால் 10 அணைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில், திருச்சி, கரூர் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.
பொதுமக்கள் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
திருவாரூரில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (4.8.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருச்சி முக்கொம்பு அணைக்கு 1.40 இலட்சம் கன அடி நீர்வரத்து.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருதால், அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை சின்னக்கல்லூரியில் 14 செ.மீ., வால்பாறையில் 12 செ.மீ., சேலையாறில் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
தமிழ்நாட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சேலத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தற்பொழுது 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி வரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் காவேரி கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Background
TN Rains Breaking LIVE Update:
தமிழ்நாட்டில் இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்கவே இன்று தீவிர கனமழை பெய்யும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில் மழை
கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதே வேளை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று (ஆக.03) அமாநிலம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக, கேரளாவின் கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால் இன்று (ஆக.04) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
அதேபோல் கனமழை காரணமாக வால்பாறை வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கடுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வால்பாறையில், தொடர்ந்து 3ஆவது நாளாக விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், குற்றால அருவிகளில் குளிக்க 4ஆவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரள மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று கேரள மாநில அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் இளைஞர்கள் செல்பி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -