தமிழகத்தில் அதிகரிக்கும் வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு சூரியன் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் காலை அலுவலகம் செல்லும் போதே அவதி அடையும் நிலை நீடித்து வருகிறது. அதிலும் நேரம் செல்ல உச்சி வெயிலால் உடல்நிலை பாதிக்கப்படும் நிலைக்கும் மக்கள் தள்ளப்படுகின்றனர். மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொடும் எனவும், வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இதன் படி, 

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

  • நாள் ஒன்றுக்கு இரண்டரை லிட்டர் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்
  • வெயில் காலங்களில் வெண்மை நிற அல்லது வெளிர் நிறப் பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்
  • ஜீன்ஸ், லெக்கின்ஸ் உள்ளவை இறுக்கும் ஆடைகளையும், கருப்பு நிற ஆடைகளையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
  • இளநீர், பழச்சாறுகள், தர்பூசணி, நுங்கு மற்றும் சுத்தமான சுகாதாரமான குளிர்பானங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்
  • உடலில் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
  • குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள், கட்டாய தேவைக்கு சென்றால் குடை மற்றும் உடல் முழுவதும் மறைக்கும் அளவிற்கு பருத்தி ஆடைகள் பயன்படுத்த வேண்டும்
  • குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், இணை நோய், உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
  • கட்டிட வேலை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் வெயிலில் பணியாற்ற வேண்டாம்
  • வெயிலில் நின்று தான் ஆக வேண்டும் என கட்டாயம் இருப்பவர்கள் ஐந்து லிட்டர் விட தங்களால் முடிந்த அளவிற்கு கூடுதல் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுக்கப்பட்டுள்ளது
  • அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப பக்கவாதம்(Heat Stroke) நீர்ச்சத்து குறைபாட்டினால் மயக்கம், வாந்தி, உடல் சோர்வு, உள்ளிட்டவை கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு சிறுநீரக செயலிழக்க வாய்ப்புள்ளது என பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.