சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட் பாக்கெட்டுகள்.! அசத்தும் அறநிலையத்துறை!
சபரிமலையில் தினந்தோறும் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், தமிழத்தில் இருந்து ஐய்யப்ப பக்தர்களுக்காக 15 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டில் முதல் கட்டமாக 5 லட்சம் பிஸ்கெட் பாக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்ப கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பல லட்சம் பக்தர்கள் சென்று வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. நவம்பர் 16 முதல் தொடங்கிய சீசனில் டிசம்பர் 3 வரை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் இன்னும் பல லட்சம் பேர் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக உதவிடும் வகையில் தமிழகத்தில் இருந்து 15 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் அனுப்பப்படவுள்ளது. இதற்கு முதல்கட்டமாக 5 லட்சம் பிஸ்கெட் பாக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்காக 5 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள்
சென்னை, பூங்கா நகரில் தமிழ்நாட்டு திருக்கோயில் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை 4 கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் இன்றைய தினம் முதற்கட்டமாக 5 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளோம்.
இந்த மாத இறுதிக்குள் மேலும் 5 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 2026 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 5 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறினார். ஆன்மிகம் சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் எந்த மாநில மக்களாக இருந்தாலும், பிற நாடுகளாக இருந்தாலும் உதவுகின்ற அரசுதான் திராவிட மாடல் அரசாகும். இலங்கையில் இயற்கை சீற்றத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுப்பி வைத்ததை இந்த நேரத்தில் மனிதநேயத்தோடு கூற கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.
குருசாமிகளுக்கு மரியாதை
அதேபோல் ஆண்டுதோறும் ஐயப்பன் மலர் வழிபாட்டினை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி, அதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐயப்ப மலைக்கு சென்று வருகின்ற 108 குருசாமிகளுக்கு பொன்னாடை மற்றும் ஐயப்பன் உருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலையையும் வழங்கி வருகின்றோம். இந்த ஆண்டும் ஐயப்பன் மலர் வழிபாடு விரைவில் கொண்டாடப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.





















