கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.   


1. கொரோனா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க நேற்று தலைமைச்செயலகத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடியது. இதில் அனைத்து சட்டமன்ற கட்சிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைக் குழு அமைத்தல், ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் இயற்றப்பட்டது.


2. இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்தது. தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி, சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதில் இருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. 




 


3. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கொரோனா சிறப்பு நிவாரணப் பொருட்கள் வரும் 3 ஜூன் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ளது. மொத்தம் 400 ரூபாய் மதிப்பிலான பதினைந்து பொருட்களை அரசு நிவாரணமாகத் தருகிறது


4. மக்கள் நீதி மய்ய கட்சியின் மதுரவாயல் தொகுதிக்கான 2021-ஆம் ஆண்டு தேர்தல் சட்டமன்ற வேட்பாளரும், அக்கட்சியின் சூழலியல் பிரிவு மாநிலச் செயலாளருமான பத்மப்ரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 


5. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள 6-8 வார இடைவெளியை 12-16 வாரமாக மாற்றும் பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் ஏற்றுக்கொண்டது. 




 


6. 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை அதன் உற்பத்தியாளர் பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொள்வதற்கு  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது. 


7. கடந்த 24 மணி நேரத்தில் 30,621 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில்  தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் (மொத்த பாதிப்பு - குணமடைவர்கள்) எண்ணிக்கை 1,83,772 ஆக அதிகரித்துள்ளது   அதே நேரத்தில், 297 உயிரிழப்புகள் எற்பட்டன.        


8. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வழிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 



9. 2021 ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒத்திவைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தேர்வு வரும் அக்டோபர் மாதம் 10 ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. 


10. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்போது நடைபெற்று வரும் ரெம்டெசிவிர் விற்பனையை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.