TN Rain Alert: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இந்திய வானிலை மையம் எச்சரிக்கை:


இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இந்த பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்தமான் தீவுகளில் நவம்பர் 26,27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:


முன்னதாக மண்டல வானில ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, “கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



  • அதன்படி, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  • 25.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • 26.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

  • 27.11.2023 முதல் 29.11.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னையில் மழை?


சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்க கடல் பகுதிகள்:


26.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


27.11.2023: தென்கிழக்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.