தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில், "மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முதன்மை பணியாக தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு, பராமரிப்பு பணிகள் உள்ளது.

தமிழ்நாட்டில் 1,046.84 கி.மீ தொலைவிற்கு ரூ.38,359.25 கோடி மதிப்பிலான 48 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் படிப்படியாக வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல், வனத்துறையின் அனுமதி, மின் இணைப்புகளை இடமாற்றம் செய்தல், நிலப்பரப்புக்கான அனுமதி வழங்குதல், வழக்கத்திற்கு மாறான மழைப்பொழிவு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு, திட்டமிடல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிதி திரட்டுதலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை போன்ற காரணங்களால் பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதுசார்ந்த நெடுஞ்சாலை அல்லது செயல்திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளாமல் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசம்  / முகமை வாரியாக மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மூன்று நிதியாண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்கள் பின்வருமாறு:

நிதியாண்டு

ஒதுக்கீடு (ரூ.கோடியில்)

செலவுகள் (ரூ. கோடியில்)

2021-22

4,305

4,305

2022-23

8,230

8,230

2023-24

9,925

9,925

2024-25(31.01.2025 வரை)

7,076

6,735

தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டணங்களை தீர்மானித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ன்படி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட கட்டணச் சலுகை அதற்கான கால அவகாசம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும்.

சலுகை காலம் முடிந்த பிறகு, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின் விதி எண் 4-ல் துணை பிரிவு (2)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தின்படி அரசு அல்லது செயல்படுத்தும் அதிகாரியால் தேசிய நெடுஞ்சாலை, பாலங்கள், சுரங்கப்பாதை அல்லது புறவழிச்சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் ஆண்டுதோறும் திருத்தியமைக்கப்படும்.

கட்டமைத்தல், செயல்பாடு, மாற்றியமைத்தல் ஆகிய திட்டங்களைப் பொறுத்தவரை, சலுகைக் காலம் முடிவடைந்த பிறகு, சுங்கச்சாவடிகள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின்னர் பயன்பாட்டுக்கு கட்டணத்தை மாநில அரசால் இயக்கப்படும் முகமைகள் மூலம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களை பயன்படுத்துவோர் கட்டணம் நிரந்தரமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வசூல் செய்யப்பட்ட தொகை,  சுங்கச்சாவடிகளை குறைக்கவோ அல்லது மூடுவது தொடர்பாக தணிக்கை செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.