தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிபேட், திருப்பத்தூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது. நாளை தொடங்கி 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. மடிப்பாக்கம், மேற்கு தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, சின்னமலை, அடையாறு, மத்திய கைலாஷ் உளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவானது. தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அண்ணா சாலை, கிண்டி, சின்னமலை, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் செல்வோர் தக்க நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றைய தினம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 38 செ.மீ மழை பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செண்டிமீட்டர்):
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்), சின்னகளார் (கோயம்புத்தூர் மாவட்டம்) 8, க்ளென்மார்கன் (நீலகிரி மாவட்டம்) 7, நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்), சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்), வால்பாறை பி.டி.ஓ (கோயம்புத்தூர் மாவட்டம்), சோலையார் (கோவை மாவட்டம்) தலா 6, கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்), வால்பாறை பிஏபி (கோவை மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) தலா 5, ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி மாவட்டம்), அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), தேவாலா (நீலகிரி மாவட்டம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.