"சமூகநீதி பத்தி அதிகம் பேசுறாங்களே தவிர" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
வள்ளலார் பிறந்த தமிழ்நாட்டில் அதிகமுறை சமூகநீதி என்கிற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்றாலும் தமிழகத்தில் தலித்களை ஏற்றத்தாழ்வுடன் பார்த்து வருகின்றனர் என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
வள்ளலார் பிறந்த தமிழ்நாட்டில் சமூகநீதி என்கிற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தினாலும் தலித்துகளை சாதிய ஏற்றத்தாழ்வுகளுடன் பார்க்கின்றனர் என தமிழக ஆளுநர் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
"தலித்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன"
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் மண்டபம் ஒன்றில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் ஜீவகாருண்ய விருது விழா நடைபெற்றது. இதில், தலைமை சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார்.
விழா மேடையில் பேசிய ஆளுநர், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில் வாழ்த்துக்கூறிய அவர், வள்ளலார் பிறந்து நூற்றாண்டுகளானபோதும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
நாட்டில் அனைத்து பகுதிகளில் இவை குறைந்துள்ளது. வள்ளலார் பிறந்த தமிழ்நாட்டில் அதிகமுறை சமூகநீதி என்கிற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. ஆனாலும், தமிழகத்தில் தலித் சகோதர, சகோதரிகளை ஏற்றத்தாழ்வுடன் பார்த்து வருகின்றனர். வள்ளலாரை ஏற்றுக்கொண்டு அனைவரையும் சமமாக பார்த்தால் தான் உண்மையான சமூகநீதியாக இருக்கும்" என்றார்.
தொடரும் ஆளுநரின் சர்ச்சை கருத்துகள்:
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாக, தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. திருவள்ளுவர், சாதி, மகாத்மா காந்தி, வள்ளலார் என பல்வேறு விவகாரங்களில் அவர் பேசிய கருத்துகளுக்கு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
"மதச்சார்பின்மை என்ற வார்த்தை நமது அரசியல் சாசனத்தில் இடம்பெறவே இல்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரக்கால நிலை அமல்படுத்தப்பட்டபோது, சில சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காக மதச்சார்பின்மை என்ற வார்த்தை சொருகப்பட்டது" என விழா ஒன்றில் ஆளுநர் ரவி பேசினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர், "சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல. சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது. நமது நாட்டின் தனித்துவம் என்னவென்றால் தர்மத்திற்கு, உண்மைக்கு எதிராக நிலை ஏற்படுகின்றதோ அப்போது இறைவனே ஒரு அவதாரம் எடுத்து வருகின்றார்" என்றார்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்